நெல்லை அருகே கோவில் விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு சரமாரி கத்திக்குத்து விழுந்தது.
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் மார்க்ரெட் தெரசா (வயது 29). இவர் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் நெல்லையை அடுத்த பழவூரில் உச்சினி மாகாளியம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவு 1 மணியளவில் பழவூர் பால் பண்ணை தெருவை சேர்ந்த ஆறுமுகம் (40) என்பவர் வந்துள்ளார். அவர் திடீரென சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசாவை சரமாரியாக கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறன்து. இதில் அவரது கழுத்து, கன்னம், தோள்பட்டை ஆகிய இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கிழே மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர் ஆறுமுகம் அங்கிருந்து தப்பியோட முயச்சி செய்துள்ளார். ஆனால் அவரை மற்ற போலீசார் மடக்கிப் பிடித்தனர். கத்திக்குத்தில் பலத்த காயம் அடைந்த மார்க்ரெட் தெரசாவை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதற்கிடையில், சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திய ஆறுமுகத்திடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ஆறுமுகம் மீது சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசா வழக்குப்பதிவு செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்திருக்கிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசாவை கத்தியால் குத்தியது தெரியவந்திருக்கிறது. இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆறுமுகத்தை கைது செய்துள்ளனர்.