நெல் மூடைகளை அரசு கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்வதற்காக ரூ.16 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழியரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சிவகங்கையை அடுத்த புல்லுக்கோட்டையில் அரசு நெல் கொள்முதல் நிலையம் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் செயல்படுகிறது. இங்கு நெல் மூடைகளை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அரசிடம் நேரடியாக விற்பனை செய்து பயன்பெற்று வந்தனர். இங்கு விவசாயிகளின் வங்கி கணக்கில் விற்பனை செய்யும் நெல்லிற்குரிய தொகை நேரடியாக செலுத்தப்படும். இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் கணக்காளராக மகேஸ்வரன் என்பவர் பணிபுரிகிறார். விவசாயிகளின் வங்கி கணக்கில் இவர் தரும் ரசீதின் அடிப்படையில் எத்தனை மூடை நெல் கொடுத்துள்ளார்களோ அதற்குரிய பணம் செலுத்தப்படும். இந்நிலையில் இந்த கொள்முதல் நிலையத்துக்கு புதுக்கோட்டை பகுதியில் வசித்து வரும் விவசாயி அருளானந்து என்பவர் 540 நெல் மூடைகளை கொண்டு வந்து கொடுத்தார்.
அப்போது கணக்காளர் மகேஸ்வரன் அந்த நெல்லை எடுக்க ரூ. 26,400 லஞ்சமாக கேட்டதாக தெரிகிறது. அதன்பின் அவர் ரூ.16 ஆயிரத்து 400 பேரம் பேசியதில் கொடுத்தால் போதும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் அருளானந்து புகார் அளித்துள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி ரூ.16 ஆயிரத்து 400 ரசாயனம் தடவப்பட்ட பணத்தை அருளானந்து கொண்டு சென்றார். அதன் பின் மதுரை தெப்பக்குளம் பகுதியில் இருந்த மகேஸ்வரனிடம் அருளானந்து அவர் கேட்ட பணத்தை லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்து அதிரடியாக கைது செய்தனர். அதனை தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.