ஒற்றை காட்டு யானை நெல், வாழை, கரும்புகளை சேதப்படுத்தி அட்டகாசம் செய்ததால் நிலத்திற்கு செல்ல முடியாமல் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே கோட்டையூர் வனப்பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் ஆந்திரா எல்லைப்பகுதியான கடப்பனத்தம் பகுதியிலிருந்து ஒற்றை காட்டு யானை பிளிறியவாறு வந்து பயங்கர அட்டகாசம் செய்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு இரவு காவலுக்கு சென்ற விவசாயிகள் காட்டு யானை பிளிறியது கேட்டு அச்சம் அடைந்தார்கள். இதுகுறித்து விவசாயிகள் பேரணாம்பட்டு வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
இத்தகவலை அறிந்து பேரணாம்பட்டு வனசரகர் சதீஷ்குமார் தலைமையில் வனவர் தயாளன், வனக்காப்பாளர் புருஷோத்தமன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்கள், விவசாயிகள் உதவியுடன் தீப்பந்தம் கொளுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் நள்ளிரவு ஒரு மணி வரை போராடி ஒற்றை காட்டு யானையை விரட்டி அடித்துள்ளனர். இதையடுத்து வனத்துறைக்கு போக்கு காட்டிய ஒற்றை காட்டு யானை பத்தலப்பல்லி வழியாக மசிகம் கிராமம் தேன்மலை வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் நுழைந்தது.
மசிகம் கிராமத்தில் வசித்த விவசாயி கமலநாதன் என்பவர் முக்கால் ஏக்கரில் நெல் பயிரிட்டு அறுவடை செய்து நிலத்தில் குவியலாக உலர வைத்து இருந்த நெற்கதிர்களை ஒற்றை காட்டு யானை சாப்பிட்டும் காலால் மிதித்தும் அருகே உள்ள சுப்பிரமணியனுக்கு சொந்தமான வாழைத் தோட்டத்தில் நுழைந்து குலை தள்ளி இருந்த ஏழு வாழை மரங்களையும் கீழே சாய்த்தும் உள்ளது. மேலும் அதில் இருந்த வாழைக்காய்களை எடுத்து சாப்பிட்டு நாசப்படுத்தி உள்ளது. அந்த வாழைத் தோட்டத்திற்கு அருகில் பாபுவின் நிலத்தில் நடவு செய்திருந்த கரும்புகளையும் சேதப்படுத்தி உள்ளது.
இதை தொடர்ந்து நேற்று அதிகாலை 5 மணி அளவில் வனப் பகுதிக்குள் புகுந்து ஒற்றை காட்டு யானை அருகே உள்ள மாச்சம் பட்டு, ரெட்டி கிணறு வனப்பகுதியை ஒட்டியுள்ள மற்றொரு பாபு என்பவர் சொந்தமான மா தோட்டத்திற்குள் நுழைந்து அங்குள்ள மரக்கிளைகளில் அட்டகாசம் செய்துள்ளது. மாமரங்களில் மாங்காய்கள் உதிர்த்து சேதபடுத்தியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.