உக்ரைனுக்கு வழங்கப்படும் ஆயுதங்களை தடுக்கும் அடிப்படையில் நேட்டோ தளங்களின் மீது ரஷ்யபடைகள் தாக்குதல் நடத்தலாம் என்று முன்னாள் பிரித்தானிய பாதுகாப்புத்துறை தலைவர் எச்சரித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்ரோஷமான போர் தொடர்ந்து வருகிறது. இந்தநிலையில் அந்நாட்டுக்கு ஆதரவாக மேற்கு நாடுகளிலிருந்து அளிக்கப்படும் ஆயுத உதவிக்களை தடுக்க நேட்டோபடைத் தளத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக முன்னாள் பிரித்தானிய பாதுகாப்புத்துறை தலைவர் லார்ட் ரிக்கெட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பிபிசி தொலைக்காட்சிக்கு அவர் பேட்டி அளித்தபோது “புடினின் படைகள் 2ஆம் உலக போருக்கு பிறகான மிகப் பெரிய ஆயுத ஓட்டத்தை தடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் உக்ரைனுக்கு பிறநாடுகளிலிருந்து வழங்கப்படும் ஆயுதங்களுக்கான கான்வாய்கள் மற்றும் விமானங்களை தாக்கி அழிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிராக நடைபெறும் போரில் நேட்டோ படைகள் ஜாவெலின் ஏவுகணைகளை வழங்கி வருவது கவனிக்கத்தக்கது.
வருகிற நாட்களில் தீவிரமடையும் போரில் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்யா தன் கட்டுக்குள் கொண்டுவந்து இருக்கும். இருந்தாலும் ரஷ்யா முன்வைக்கும் தீர்வு ஒப்பந்தத்திற்கு உக்ரைன் ஏற்றுக்கொள்ளாது. இதனால் இந்நிலைமை கெரில்லாப் போராக மாறக்கூடும், இவை ஐரோப்பிய யூனியனில் உறுதியற்ற தன்மையை உருவாகும் என தெரிவித்துள்ளார். பின் ரசாயன ஆயுதத் தாக்குதல்கள் குறித்து பேசிய அவர், ஜனாதிபதி புடின் கண்டிப்பாக உக்ரைனில் அணுஆயுத மற்றும் ரசாயன ஆயுதத்தாக்குதல்களை நடத்த விரும்பலாம் என்று தெரிவித்துள்ளார்.