நேதாஜி தினசரி மார்க்கெட்டில் காய்கறி அதிகமாக வந்ததால் விலை குறைந்த நிலையில், தக்காளி மட்டும் ஏற்றமாக இருந்தது.
ஈரோடு மாவட்டத்தில் வா. உ. சி பூங்கா மைதானத்தில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் 700-க்கும் அதிகமான காய்கறி கடைகள் அமைந்துள்ளது. இந்த காய்கறி மார்கெட்டிற்கு தினந்தோறும் கிருஷ்ணகிரி, தாளவாடி, சத்தியமங்கலம், கர்நாடக மாநிலம் கோலார், ஆந்திரா, ஒட்டன்சத்திரம் போன்ற பகுதியில் இருந்து காய்கறிகள் விற்க கொண்டுவரப்படுகிறது. இந்த மார்க்கெட்டிற்கு ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளும், பொதுமக்களும், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்களும் இங்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
கடந்த சில வாரங்கள் காய்கறிகளின் வரத்து குறைந்த நிலையில் பல்வேறு காய்கறிகளின் விலை அதிகமாகிவிட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர். இந்நிலையில் தற்சமயம் காய்கறி வரத்து அதிகமாக வந்ததால் காய்கறிகளின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் ஒரு கிலோவிற்கு ரூபாய் 10 முதல் 15 வரை குறைந்து காணப்படுகிறது. ஆனால் தக்காளி விலை மட்டும் குறையாமல் அதிகமாகவே காணப்படுகிறது. ஈரோடு மார்க்கெட்டில் நாள்தோறும் 10 டன் தக்காளி வருகின்ற நிலையில், தற்சமயம் பாதியாக குறைந்து 5 டன் தக்காளி மட்டும் வருகின்றது.
இதனால் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூபாய் 50 முதல் 60 வரை விற்பனை செய்யப்படுகிறது. நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் நேற்று காய்கறிகளின் விலை நிலவரம், கத்திரிக்காய் கிலோ 40 ரூபாய், முள்ளங்கி கிலோ 30 ரூபாய், அவரைக்காய் கிலோ 60 ரூபாய், பீர்க்கங்காய் கிலோ 60 ரூபாய், பாகற்காய் கிலோ 40 ரூபாய், வெண்டைக்காய் கிலோ 40 ரூபாய், பீட்ரூட் கிலோ 40 ரூபாய், பீன்ஸ் கிலோ 60 ரூபாய், புடலங்காய் கிலோ 60 ரூபாய், முருங்கைக்காய் கிலோ 40 ரூபாய், முட்டைகோஸ் பத்து ரூபாய் முதல் 20 ரூபாய் வரை, காலிபிளவர் கிலோ 20 ரூபாய், மிளகாய் கிலோ 40 ரூபாய், சின்ன வெங்காயம் கிலோ 20 ரூபாய், பெரிய வெங்காயம் கிலோ 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.