செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், களப்பணியாளர்கள் அனைவரும் துரிதமாக செயல்பட்டதன் காரணமாக பெரிய சேதங்கள் ஏற்படாமல் தடுக்கப்பட்டது உண்மை. காலையில் இருந்து கடலூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை மாவட்டம், தஞ்சை மாவட்டம், திருவாரூர் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்த்தேன்.
விவசாயிகளுடைய கருத்துக்களை, அவர்களின் உணர்வுகளை அவர்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டு தெரிந்துகொண்டேன்.ஏற்கனவே கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள் தலைமையில் அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டு, ஆரம்பகட்ட ஆய்வினை மேற்கொண்டு நடத்தினோம். குறிப்பாக டெல்டா பகுதியில் இருக்கக்கூடிய விவசாயிகளை சந்தித்து நீங்களே நேரடியாக பார்த்து அரசுக்கு ஒரு அறிக்கையை ஆய்வறிக்கை தரவேண்டும் என உத்தரவு போட்டிருக்கிறோம்.
அவர்களும் அந்த பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். என்னென்ன பிரச்சனை இருக்கிறது என்று என்னை சந்தித்து கூறியிருக்கிறார்கள். நடப்பு சம்பா பருவத்துல இதுவரை 17,46,000 ஹெக்டர் பரப்பளவு பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்றைய கணக்குப்படி பார்த்தால் 68,652 ஏக்கர் பரப்பளவு நீரில் மூழ்கி உள்ளது என்று தெரியவந்திருக்கிறது.
தேங்கி இருக்கக்கூடிய நீரை வெளியேற்றுவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள நீர்வளத்துறை மற்றும் ஊரக உள்ளாட்சி துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டு இருக்கிறேன். இயன்ற அளவு பயிர்களை காப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு பயிர்களை காப்பாற்ற முடியாத நிலங்களில் உழவர்கள் மறு நடவு செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.
மேலும் கிராம வாரியாக முழுமையான கணக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கிறது அது விரைவில் முடிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் பெரும் மழையினால் முழுமையாக பயிர் சேதம் அடைந்த உழவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உங்கள் மூலமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்.