நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் இன்று போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையில் நேற்று முன்தினம் முதல், ஆன்லைன் மூலம் கல்லூரி வகுப்புகளை நடத்தி விட்டு செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்தக்கூடாது, ஆன்லைனிலேயே நடத்த வேண்டும் என்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தின் முன்பும், கல்லூரி முன்பும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இந்நிலையில் போராடிய 710 மாணவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 3-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்ட 150 மாணவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது.
அமெரிக்கன் கல்லூரி, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, அரசு பாலிடெக்னிக், காமராஜர் பல்கலை, மதுரா கல்லூரி, சௌராஷ்டிரா கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.. பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கொரோனா தடுப்பு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று தமிழகத்தில் அனைத்து வகையான கல்லூரிகளுக்கும் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது..