தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் திசையன்விளையில் நேற்று முன்தினம் மாலை திமுகவினர் பிரசாரத்தை நிறைவு செய்தனர். இதில் திமுக அமைச்சர்கள் பெரியசாமி மற்றும் கீதா ஜீவன் கலந்து கொண்டனர். இந்த வேளையில் அதே பகுதியில் அதிமுகவை சேர்ந்த தளவாய் சுந்தரம் ஆகியோர் தலைமையில் அதிமுகவினரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் இரு தரப்பினரிடையேயும் ஒரே இடத்தில் பிரச்சாரம் செய்ததன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுகவினர் பிரசாரம் செய்து கொண்டிருந்த வழியில் திமுகவினர் தங்கள் பிரச்சாரத்தை முடித்து விட்டு அவ்வழியாக சென்றனர். அப்பொழுது ‘பிரச்சாரத்தை முடித்துக் கொள்ளுங்கள், எங்களுக்கு நேரமாகிவிட்டது’ என்று திமுகவை சேர்ந்த ஒருவர் அதிமுகவை சேர்ந்த ஒருவரிடம் கூறியுள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கீதாஜீவனின் காரில் இருந்த கொடி கம்பியை ஆத்திரமடைந்த அதிமுகவினர் சேதப்படுத்தி உள்ளார்கள்.
எனவே இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனை தொடர்ந்து உடனடியாக காவல்துறையினர் அங்கு வந்த இரு தரப்பினரையும் சமாதானம் செய்ததை தொடர்ந்து அங்கிருந்த தொண்டர்கள் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றனர். மேலும் நல்லகண்ணு என்பவர் இந்த சம்பவம் தொடர்பாக கொடுத்த புகாரின் பேரில் 6 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.