மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஒருவர் பலியான நிலையில், 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வாழக்காய்பட்டியில் அழகர்சாமி(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மேட்டுக்கடையில் கேபிள் டிவி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று காலை அழகர்சாமி தனது நண்பரான சித்திக் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கவராயபட்டி பிரிவில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அழகர்சாமியின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த அழகர்சாமி, சித்திக், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ராஜ்குமார் ஆகிய 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அழகர்சாமி பரிதாபமாக இறந்துவிட்டார். மற்ற இரண்டு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.