வங்காளதேசத்தில் உள்ள பத்மா நதியில் படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஆற்றில் விழுந்து 25 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்காளதேசத்தில் உள்ள ஷிப்சார் நகர் அருகே பத்மா நதியில் மணல் ஏற்றிச் சென்று கொண்டிருந்த படகும், பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த மற்றொரு படகும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் படகில் இருந்த பயணிகள் திடீரென்று ஆற்றில் விழுந்து தண்ணீரில் தத்தளிக்க ஆரம்பித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதில் 5 பேர் உயிருடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மேலும் 25 பேருடைய உடல்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது.
மேலும் அதில் சிலரை காணவில்லை. இதையடுத்து உள்ளூர் மக்கள் மற்றும் தீயணைப்பு படையினர் அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து வல்லுநர்கள் கூறும் போது மோசமான பராமரிப்பு மற்றும் தரம் குறைந்த படகுகளில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லுதல் ஆகிய காரணங்களால் இதுபோன்ற விபத்துகள் வங்காளதேசத்தில் அதிகம் ஏற்படுவதாக கூறியுள்ளனர்.