வீட்டில் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சமீப காலமாக கொலை, கொள்ளை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சட்ட விரோத செயல்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கின்றனர். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புத்தந்தூர் கிராமத்தில் விவசாயியான அய்யாக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முத்து மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் மணிகண்டன் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார்.
இதற்காக மணிகண்டனின் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு கோவிலுக்கு சென்றுள்ளனர். இதனை அடுத்து இரவு நேரத்தில் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அய்யாக்கண்ணு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 ஆயிரம் ரூபாய் பணம், விலை உயர்ந்த செல்போன், 7 பவுன் தங்க நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அய்யாக்கண்ணு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.