தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 225 இடங்களில் மழை அதிகமாக பெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தொடர்ச்சியாக 2 புயல்கள் தமிழகத்தை நோக்கி வந்துள்ளன. கடந்த மாதம் (நவம்பர்) 24-ந்தேதி வங்கக்கடலில் நிலைக்கொண்டு இருந்த நிவர் புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை கொட்டியது. இதையடுத்து வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புரெவி புயலாக மாறியுள்ளது. இந்த புயல் நேற்று நள்ளிரவு முதல் கரையை கடக்க தொடங்கியது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியுள்ளது. மேலும் புரெவி புயலை அடுத்து அந்தமான் அருகே மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அந்தவகையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 225 இடங்களில் மழைப்பொழிவு பதிவாகி இருக்கிறது. இதில் அதிகபட்சமாக வேதாரண்யம் பகுதியில் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தற்போது புயல் கரையை கடந்தாலும், அதன் தாக்கம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு (6-ந்தேதி வரை) மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று தேனி, திண்டுக்கல், நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மற்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்துள்ள மழையின் விவரம், “வேதாரண்யம் 20 செ.மீ, தலைஞாயிறு மற்றும் திருப்பூண்டி தலா 15 செ.மீ, நாகப்பட்டினம் 14 செ.மீ, திருத்துறைப்பூண்டி 13 செ.மீ, மயிலாடுதுறை மற்றும் ராமேஸ்வரம் தலா 12 செ.மீ, முதுகுளத்தூர் 11 செ.மீ, சீர்காழி, குடவாசல், அதிராம்பட்டினம் மற்றும் மஞ்சளாறு தலா 10 செ.மீ, திருவாரூர், ஆடுதுறை, தாம்பரம் மற்றும் பட்டுக்கோட்டை தலா 9 செ.மீ, நன்னிலம், மரக்காணம், பாம்பன், திருவிடைமருதூர், திருக்கழுக்குன்றம் மற்றும் வலங்கைமான் தலா 8 செ.மீ, மணல்மேடு, கொள்ளிடம், கேளம்பாக்கம், காட்டுமன்னார்கோவில், வானூர், மன்னார்குடி, தரமணி, மதுக்கூர், பரங்கிப்பேட்டை, அய்யம்பேட்டை, கடலூர் மற்றும் நீடாமங்கலம் தலா 7 செ.மீ” உள்பட 225 இடங்களில் மழை பதிவாகியுள்ளது.