சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ராகுல் காந்தியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் இரண்டாவது முறையாக அமலாக்கத் துறை அலுவலகத்தில் காங்கிரஸ் இடைத்தலைவர் சோனியா காந்தி இன்று ஆஜரானார். அவரிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையில் அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
நாடாளுமன்றம் கூடியதுமே சோனியாவிடம் அமலாக்கத் துறை விசாரணை, ஜிஎஸ்டி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் எழுப்பி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து ராகுல் காந்தி தலைமையில் வெளியேறிய காங்கிரஸ் எம்பிக்கள் ஜனாதிபதி மாளிகையை நோக்கி பேரணியாக சென்றுள்ளனர். அந்த பேரணியை விஜய் சவுக்கு பகுதியில் போலீஸ் படையினர் தடுத்து நிறுத்தி போராட்டத்தை கைவிடும் படி கூறினார். ஆனால் ராகுல் காந்தி அதை ஏற்க மறுத்தார். இதையடுத்து ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபட ராகுல் காந்தியை காவல்துறையினர் கைது செய்தனர்.