உத்தரப்பிரதேசத்திலுள்ள நொய்டாவில் சூப்பர் டெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் 40 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட இரட்டை கோபுரத்தை கட்டி இருக்கிறது. சுமார் 7,000 பேர் தங்கும் வசதி உடைய இந்த குடியிருப்பில் இதுவரையிலும் யாரும் குடியேறவில்லை. ஒரு டவரில் 32 தளங்களும், மற்றொன்றில் 29 டவர்களும் இருக்கிறது. இந்த நிலையில் அந்த கட்டுமானமானது விதிகளுக்கு புறம்பானது என புகார் பெறப்பட்டது. இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்ற விசாரணைக்கு வந்த நிலையில், கடந்த வருடம் கட்டிடங்களை வெடி வைத்து தகர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை வெடிவைத்து தகர்க்கும் பணி எடிபைஸ் இன்ஜினியரிங் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. வருகிற 28ம் தேதி கட்டிடம் இடிக்கப்படவுள்ள சூழ்நிலையில், இதற்கான பணிகளை எடிபைஸ் நிறுவனம் தயார்நிலையில் வைத்துள்ளது. இதற்கிடையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த இரட்டை கோபுர கட்டிடத்தின் அருகேயுள்ள 5000-க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டனர். அத்துடன் அப்பகுதியிலிருந்த சுமார் 1,500 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த கட்டிடத்தை இடிப்பதற்காக சுமார் 37,000 கிலோ வெடிப்பொருள்கள் பயன்படுத்தப்படவுள்ளது. அத்துடன் 9,000 துளைகள் போடப்பட்டு வெடிப்பொருள்கள் நிரப்பப்படுகிறது. இந்த கட்டுமானத்தின் மதிப்பீடு சுமார் 300 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ள நிலையில், வெடிப்பொருள் வைத்து தகர்த்தால் இது 9 நொடியில் தூள்தூளாக தரைமட்டமாக இருக்கிறது. வரும் 28ம் தேதி மதியம் 2:30 மணிக்கு இந்த இரட்டை கோபுரங்களை இடிக்க திட்டமிட்டு இருக்கின்றனர். அவ்வாறு இடித்தப் பிறகு கழிவுகளை எடுத்துச்செல்ல 1200 டிப்பர் லாரிகள் தயாராக இருக்கும்.