நம் இந்திய தேசத்தை உலகிற்கு தந்தவர்களில் முதன்மையானவர் சர் சி.வி. ராமன் அவர்கள். கடந்த 1888-ம் வருடம் நவம்பர் 7 ஆம் தேதி தமிழகத்தில் திருச்சிராப்பள்ளியில் சந்திரசேகர வெங்கட ராமன் பிறந்தார். இவரது தந்தைக்கு அறிவியல் மற்றும் கணிதத்தில் அதிக ஆர்வம் இருந்தது. இளம்வயதிலேயே அறிவுக்கூர்மை மிகுந்தவராக சி.வி. ராமன் திகழ்ந்தார். சென்ற 1904ம் வருடம் அவருக்கு 16 வயதான போது சென்னையின் பிரசிடென்சி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். அந்த வருடத்தில் அவருக்கு மட்டுமே முதல்நிலை தேர்ச்சியும், தங்கப் பதக்கமும் கிடைத்தது. இதையடுத்து அதே கல்லூரியில் அவர் பல்வேறு சாதனைகளை முறியடித்து பெளதிகத்தில் முது நிலை பட்டம் பெற்றார். இதனால் சி.வி. ராமனின் அறிவியல் திறமை இளம் வயதிலேயே வெளிப்பட்டது. அதன்பின் அவருக்கு 18 வயது ஆனபோது அவரது முதல் ஆய்வு அறிக்கை லண்டனில் அறிவியல் சஞ்சிகையில் பிரசுரமானது.
அப்போது அறிவியல் உலகமானது அவரை கவனிக்கத் துவங்கியது. பின் அவர் ஒளி, ஒலி, காந்தசக்தி போன்றவற்றில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இதன் காரணமாக அவருக்கு அதிகமான சம்பளத்தில் அரசாங்க வேலை கிடைத்தும், சிறிது காலத்தில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். கடந்த 1914 ஆம் வருடம் கல்கத்தாவில் ஒரு புது அறிவியல் கல்லூரி நிறுவபட்ட போது அதன் தலைமை ஆசியராக அவர் நியமிக்கப்பட்டார். 1921ல் அவருக்கு முனைவர்பட்டம் கிடைத்தது. 1924 ஆம் ஆண்டு லண்டன் ராயல்கழகம் அவருக்கு கெளரவ உறுப்பினர் தகுதியை வழங்கியது. அறிவியலில் அவர் ஆற்றியபங்கை அங்கீகரிக்கும் விதமாக கடந்த 1929 ஆம் வருடத்தில் இந்தியாவில் செயல்பட்ட பிரிட்டிஷ் அரசாங்கம் ராமனுக்கு “சர்” பட்டம் வழங்கி கவுரவித்தது.
எப்போதுமே சர் சி.வி. ராமன் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு இருந்தார். சூரியஒளி தண்ணீரிலும், ஐஸ் கட்டியிலும், மற்றப் பொருட்களிலும் எவ்வாறு பயணிக்கிறது என்பதை ஆர்வமுடன் ஆராய்ந்தார். ஒளி அவ்வாறு பல பொருட்களில் பயணிக்கும் போது புது கோடுகள் உருவாவதை அவர் கணித்துக் கூறினார். இந்த முக்கியமான கண்டுபிடிப்புக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது. அக்கோடுகள் “ராமன் கோடுகள்” எனவும் அந்த விளைவு “ராமன் விளைவு” எனவும் இன்றும் அழைக்கப்பட்டு வருகிறது. அந்த கண்டுபிடிப்பு 1928ம் வருடம் பிப்ரவரி 28ம் தேதி நிகழ்ந்தது.
அதன்பின் அந்த கண்டுபிடிப்புக்காக சர் சி.வி. ராமனுக்கு 1930ம் வருடம் பெளதிகத்துக்கான “நோபல் பரிசு” வழங்கப்பட்டது. இதனால் நோபல்பரிசை வென்ற முதல் தமிழர் சர் சி.வி. ராமன் என்பது கவனிக்கத்தக்கது. அவ்வாறு அவருக்கும் இந்தியாவுக்கும் பெருமை தேடித் தந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்த பிப்ரவரி 28ஆம் தேதியை சிறப்பிக்கும் விதமாக தேசிய அறிவியல் தினம் வருடந்தோறும் கொண்டாடபடுகிறது. இந்தியாவில் அப்போது அறிவியல் ஆராய்ச்சிக்கு உகந்தநிலை நிலவாததால் நம் தேசத்தில் எதுவும் பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ முடியாது என்பது தான் விஞ்ஞானிகளின் அனு மானமாக இருந்தது. அந்தஎண்ணத்தை சர் சி.வி.ராமன் தகர்த்ததால் அறிவியல் பங்களிப்பு இந்தியாவுக்கு மட்டுமின்றி தமிழர்களுக்கும் மிகப்பெரிய ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் அதே கண்டுபிடிப்புக்காக லண்டன் ராயல் கழகமானது சர் சி.வி. ராமனுக்கு “ஹியூம்” பதக்கம் வழங்கி சிறப்பித்தது. அதுமட்டுமின்றி இந்திய அரசாங்கம் அவருக்கு சென்ற 1954ல் “பாரத ரத்னா” விருது வழங்கியது.
கடந்த 1958-ம் வருடம் “லெனின் அமைதி” பரிசையும் சர் சி.வி. ராமன் பெற்றார். 1943ல் அவரது பெயரிலேயே ராமன் ஆராய்ச்சிக்கழகம் பெங்களூரில் நிறுவப்பட்டது. அக்கழகத்தில் அவர் தன் வாழ்க்கை முழுதும் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டார். இந்தியாவுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த சர் சி.வி. ராமன் கடந்த 1970-ம் வருடம் நவம்பர் 21ஆம் தேதியன்று பெங்களூரில் காலமானார். “ராமன் விளைவு” என்ற அவரது அறிவியல் கண்டுபிடிப்பு உலகின் தொழிற்துறை வளர்ச்சியில் பெரும் பங்காற்றி இருக்கிறது. 20ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் எனும் தகுதியை தமிழனால் பெறமுடியும் என்பதை சர் சி.வி. ராமன் வாழ்ந்துகாட்டினார். பிறப்பிலேயே அவர் அறிவுக் கூர்மை உடையவராக இருந்தாலும், அவரிடம் விடா முயற்சி, கடும் உழைப்பு, தன்னம்பிக்கை ஆகிய நற்குணங்களும் இருந்தது. இவை எல்லாம் சேர்ந்ததால்தான் அவரால் பிரகாசிக்க முடிந்தது. அத்துடன் அறிவியல் வரலாற்றிலும் இடம்பிடிக்க முடிந்தது.