கடலூர் மாவட்ட சிதம்பரம் அருகில் உள்ள கே.ஆர்டு கிராமத்தில் பாரதிராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி அருள்மொழி. இவர் நிறைமாத கற்பிணியாக இருந்தார். இதனையடுத்து சிதம்பர காமராஜர் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது கடந்த 8 ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தையின் இடது காலில் வீக்கம் இருந்தது. இதனை பார்த்த பாரதிராஜா குழந்தையை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்று அங்கு ஸ்கேன் செய்து பார்த்தார். அப்போது குழந்தையின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சடைந்த குழந்தையின் பெற்றோருக்கு சிகிச்சைக்காக ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பச்சிளம் குழந்தையின் காலில் மாவு கட்டு போடப்பட்டது. பிறந்து 4 நாட்களே ஆன குழந்தைக்கு காலில் மாவு கட்டு போடப்பட்டதை பார்த்த பெற்றோர் கண் கலங்கினர். இதற்கிடையில் பாரதிராஜா சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரான ரவியை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகாரில், தனது குழந்தையின் நிலைக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட டாக்டர்களின் கவன குறைவும், அலட்சியப் போக்குமே காரணம். எனவே உரிய விசாரணை மேற்கொண்டு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.