கொரோனா ஊரடங்கு காலத்தில் சுகாதாரமான முறையில் முட்டை விற்ற முட்டை வியாபாரிக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளது.
கொழும்பில் முட்டை வியாபாரி ஒருவர் சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றி மோட்டார் சைக்கிளில் வைத்து முட்டையை விற்பனை செய்து வருவது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் மேல்மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாடத் தேவையான காய்கறிகள், பால் போன்ற பொருள்களை வீடுகளுக்குச் சென்று விநியோகிக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் முட்டை வியாபாரி வியாபாரம் செய்ய தொடங்கியுள்ளார். அவர் முட்டையை கொடுத்து, பயனாளர்களிடம் பணத்தை வாங்கும்போது ஒன்றரை மீட்டர் இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக இரண்டு பிளாஸ்டிக் கூடைகளை இணைத்து கம்பி ஒன்றை பயன்படுத்தி வாங்குகிறார். தங்களுக்குத் தேவையான முட்டை அளவை வாங்குபவர்கள் தெரிவித்த பின்னர் அவர் அந்தக் கம்பியின் வாயிலாக தூரத்திலிருந்து முட்டையை வழங்குகிறார். இதையடுத்து மிகவும் பாதுகாப்பாகவும், சுகாதார முறையிலும் முட்டை விற்பனையில் ஈடுபடும் இந்த முட்டை வியாபாரிக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்களின் பாராட்டுகள் குவிந்து வருகிறது.