தீர்த்தமலை கோவிலில் பணிபுரிந்த அர்ச்சகர் பாலாஜி என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அருகில் தீர்த்தமலையில் பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மலை மீது இருப்பதால் தமிழகம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்வார்கள். இந்தக் கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்களின் ஒருவரான 40 வயதுடைய பாலாஜி என்பவர் கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவரிடம் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது.
அந்த ஆடியோவில் சிறப்பு பூஜை செய்வதற்கு முன்னதாகவே ரூ 3,000 கொடுத்தால் பூஜைக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் வாங்கி தயார் நிலையில் இருக்கும் என்றும், பூஜை பொருட்களை கோவிலுக்கு வருகின்ற போது நீங்கள் தனியாக வாங்கி வர வேண்டாம் என்று பேசியிருந்தார். இந்த ஆடியோ பக்தர்களுக்கு இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தீர்த்தமலை கோவிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு பூஜை பொருட்களை முன்னதாகவே வாங்கி வைப்பது இது போன்ற விதிமுறை எதுவும் இல்லாத நிலையில் பக்தர்களிடம் அர்ச்சகர் பணம் கேட்பது குறித்து இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து அர்ச்சகர் பாலாஜியை சஸ்பெண்ட் செய்து இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.