திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வருகிற ஜனவரி மாதம் 29-ஆம் தேதி தைப்பூச திருவிழா தொடங்குவதால் பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவர் பக்தர்கள் குழு உடன் பழனிக்கு பாதயாத்திரையாக வந்து கொண்டிருந்தார். நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் இரவில் தூங்கிவிட்டு மீண்டும் அவர்கள் பழனி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது செல்வியுடன் வந்தவர்கள் முன்னால் சென்றதால் அவர் மட்டும் தனியாக நடந்து சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து கரூரை சேர்ந்த பக்தர்கள் குழுவோடு செல்வி பாதயாத்திரையாக நடந்த சென்றுள்ளார். அப்போது பழனி நோக்கி வேகமாக வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து படுகாயமடைந்த ராமன், கருத்தா, ஸ்ரீரங்கன், கன்னியம்மாள் உட்பட 6 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று செல்வியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் சிகிச்சை பலனின்றி கருத்தா என்பவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.