திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவை தொடங்கி தோமாலை, அர்ச்சனை, கல்யாண உற்சவம், வசந்த உற்சவம், அஷ்டதள பாத பத்மாராதனை சேவை உள்ளிட்ட பல சேவைகள் நடத்தப்படுகின்றது. இந்நிலையில் ஏழுமலையான் சுவாமிக்கு புதிதாக நவநீத சேவை என்ற பெயரில் ஒன்றை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டு பசு மூலம் பெறப்படும் வெண்ணையை ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படும். இதற்காக 33 கீர் பசுக்கள் குஜராத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு, திருப்பதியில் உள்ள கோசாலையில் பராமரிக்கப்படுகின்றது.
இந்த பசுக்களில் இருந்து பெறப்படும் பாலை தயிராக்கிச் அதன்மூலம் கடைந்து எடுத்த வெண்ணெயை நேற்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்கு படைத்தனர். நாளை முதல் திருப்பதி மலையில் சேவை அடிப்படையில் பணியாற்றும் ஸ்ரீவாரி சேவை தொண்டர்கள் கோசாலையில் இருந்து எடுக்கப்படும் வெண்ணையை ஊர்வலமாக எடுத்து வந்து கோவில் அர்ச்சகரிடம் சமர்ப்பிக்க உள்ளனர். இதன் மூலம் ஏழுமலையானுக்கு தினமும் நவநீத சேவை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.