தமிழகத்தில் பக்தியை அரசியல் வியாபார பொருளாக மாற்ற முயற்சி செய்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் ஸ்டாலின், பக்தியை அரசியல் வியாபார பொருளாக மாற்ற சிலர் முயற்சி செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார். தங்களது கொள்கைகள் மற்றும் சாதனைகளை கூற இயலாதவர்கள் ஆன்மிகத்தில் பிரிவினையை ஏற்படுத்த பார்க்கிறார்கள். கார்ப்பரேட்டுகளுக்கு பாதகம் இல்லாமல் ஆட்சியை நடத்துவது தான் பிரதமர் மோடியின் கொள்கை என்று விமர்சனம் செய்துள்ளார்.