கர்நாடக மாநிலத்தில் நாளை ( ஜூலை 10) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை எடுத்து பண்டிகைக்கான சில வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி பக்ரீத் பண்டிகையை ஒட்டி பள்ளி, கல்லூரிகள், சாலைகள், பொதுமக்கள் கூடும் பகுதிகள்,விளையாட்டு மைதானங்கள் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கால்நடைகளை பலி கொடுக்க தடை விதிக்கப்படுகிறது. கால்நடைகளை பொது இடங்களில் பலி கொடுக்க கடந்த 2020 ஆம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதால் பக்ரீத் பண்டிகையின் போது அனைவரும் இதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
கூட்டு பிரார்த்தனை செய்வதற்கு எந்தவித தடையும் கிடையாது. ஆனால் மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கூட்டுப் பிரார்த்தனையின் போது அரசின் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அரசு எங்கு அனுமதி அளிக்கிறதோ அங்கு மட்டுமே கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் பக்ரீத் பண்டிகை கொண்டாடுவதற்காக போலீஸ் துறை, கால்நடைத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிடும் உத்தரவுகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றுவது கட்டாயம். விதிகளை மீறுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.