பக்ரைனில் வேலைக்கு சென்ற தொழிலாளி 29 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்கு திரும்பிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருந்தலாக்குறிச்சி பகுதியில் பச்சமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுந்தராம்பாள் என்ற மகளும், மணிவேல் என்ற மகனும் உள்ளனர். கடந்த 1993-ஆம் ஆண்டு பச்சமுத்து தோட்ட வேலைக்காக பக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் 1996-ஆம் ஆண்டு வரை பச்சமுத்து நல்லம்பாளுக்கு பணம் அனுப்பியும், கடிதமும் அனுப்பி பேசி வந்துள்ளார். அதன்பிறகு எந்த தகவலும் பச்சமுத்துவிடம் இருந்து நல்லம்மாலுக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் கடலூர் மாவட்டத்திலுள்ள எஸ்.புதூர் கிராமத்தில் வசிக்கும் தங்கதுரை என்பவர் பக்ரைனுக்கு சென்றார்.
அங்கு பச்சமுத்து தங்கியிருந்த அதே அறையில் தங்கதுரையும் தங்கியுள்ளார். அப்போது பச்சமுத்து தனது ஊர் குறித்தும் தனக்கு எஸ்.புதூரில் முத்துசாமி என்கிற உறவினரும் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு சரியான வேலையும் பணம் இல்லாத காரணத்தால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து முத்துசாமி பச்சமுத்து பக்ரைனில் இருப்பது குறித்த தகவலை மணிவேலிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மணிவேல் தனது தந்தை பச்சமுத்து பக்ரைன் நாட்டில் தவிர்த்து வருவதாகவும் அவரை மீட்டு தரும்படியும் போலீஸ் சூப்பிரண்டிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையே பக்ரைன் நாட்டின் அன்னை தமிழ் மன்ற நிர்வாகிகளின் உதவி மணிவேலுக்கு கிடைத்தது.
இதனை அடுத்து அன்னை தமிழ் மன்ற தலைவர் செந்தில்குமார், செயலாளர் தாமரைக்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பச்சமுத்துவை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர். அதன்படி விமானம் மூலம் அன்னை தமிழ் மன்ற செயலாளர் தாமரைக்கண்ணன் பச்சமுத்துவை அழைத்து வந்து மணிவேலிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் பச்சமுத்துவை பார்த்த மணிவேல் தனக்கு 1 1/2 வயது இருக்கும்போது எனது தந்தை பக்ரைன் நாட்டிற்கு சென்றார். இதனையடுத்து நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு வந்த பச்சைமுத்துவை நல்லம்மாள் மற்றும் அவரது உறவினர்கள் ஆனந்த கண்ணீருடன் வரவேற்றனர். மேலும் 29 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வெளிநாட்டிலிருந்து பச்சைமுத்து வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.