கடந்த 2013 முதல் 2016ஆம் ஆண்டு வரை தேசிய பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குனராக பணிபுரிந்து வந்த சித்ரா ராமகிருஷ்ணன் தன்னுடைய பதவி காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) குற்றச்சாட்டை முன்வைத்தது. மேலும் பங்கு சந்தை ரகசியங்களை இமயமலையில் உள்ள ஒரு சாமியாரிடம் சித்ரா ராமகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அதோடு தலைமை வியூக அதிகாரியாக முன் அனுபவமில்லாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை நியமனம் செய்து சலுகைகளை வழங்கியதாகவும் புகார் எழுந்தது.
இந்த விவகாரத்தில் ஆனந்த் சுப்பிரமணியன் மற்றும் சித்ரா ராமகிருஷ்ணன் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். ஆனந்த் சுப்ரமணியன் பிப்ரவரி 25ம் தேதியும், சித்ரா ராமகிருஷ்ணன் கடந்த மார்ச் 6ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் டெல்லியில் உள்ள சிறப்பு கோர்ட்டில் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் இருவருக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
அதில், சித்ரா ராமகிருஷ்ணன் பங்குச் சந்தையின் முக்கிய முடிவுகளில் தனது பதவியை தவறாக பயன்படுத்திக் கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக சித்ரா ராமகிருஷ்ணன், ஆனந்த் சுப்பிரமணியனை தனது ஆலோசகராக நியமித்து பிறகு அவரை ரூ. 4.21 கோடி ஊதியத்தில் வியூக அதிகாரியாக நியமித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதேபோல் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அடுத்தடுத்த பதவி உயர்வுகள் மற்றும் முக்கியமான முடிவுகளை வழிநடத்தியுள்ளதாகவும், அந்த நபர் இமயமலையில் வசிக்கும் ஒரு மர்மமான யோகி என்பதும் சித்ரா ராமகிருஷ்ணனின் மின்னஞ்சல் பரிமாற்றங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.