சிவகங்கை மாவட்டம் கண்ணமங்கலம்பட்டி பட்டத்தரசி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலப்பட்டியில் சிறப்பு வாய்ந்த பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 25-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவை முன்னிட்டு காலை, மாலை என இருவேளையும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. நேற்று காலை 9 மணி அளவில் ஏராளமான பக்தர்கள் கோவில் மந்தை கூடம் முன்பு இருந்து பால்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
கோவில் வளாகத்தில் மாலை 6 மணிக்கு பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு செய்தனர். குழந்தைகளை நோய் நொடியிலிருந்து பாதுகாக்க கரும்பு தொட்டில் நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. பக்தர்கள் விழாவை முன்னிட்டு தீச்சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவிற்கான முன் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.