உணவின்றி தவிப்பவர்களுக்கு பத்து வருடங்களாக இலவச மதிய உணவு கொடுக்கும் அறக்கட்டளை நிறுவனருக்கு பாராட்டுகள் குவிகிறது
ஹைதராபாத்தை சேர்ந்த ஆசிவ் உசேன் என்பவர் 2010ஆம் ஆண்டு சாஹினா அறக்கட்டளையை நிறுவினார். இந்த அறக்கட்டளையின் மூலமாக ஜூபிலி மலைப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக மதிய உணவும் அத்தியாவசிய பொருட்களையும் இலவசமாக வழங்கி வருகின்றார். இதுகுறித்து அவர் கூறுகையில் “உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு கொடுப்பதற்காக பல சமையல் கூடங்கள் நகரத்தின் வெவ்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு காலத்தில் சாப்பாடு இல்லாமல் தவித்து வந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கு தன்னார்வலர்களின் உதவியுடன் தேவையான உணவுகளை வழங்கி வந்தோம். கடந்த 10 வருடங்களாக இந்த சேவையை தொடர்ந்து செய்து வரும் நாங்கள் தெலுங்கானா முழுவதும் விரிவுபடுத்தும் திட்டத்தில் உள்ளோம். மதம் என்பது பசிக்கு கிடையாது.
பல நபர்கள் குப்பைத்தொட்டியில் இருக்கும் உணவை சாப்பிடும் நிகழ்வை நாங்கள் பார்த்துள்ளோம். அதோடு பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம்” என கூறினார். அண்மையில் ஹைதராபாத் மேற்கு மண்டல ஆணையர் சீனிவாசன் ஆசிவ் உசேனை அழைத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.