உடலில் ஜீரண சக்தியை அதிகப்படுத்தி பசியை அதிகரிக்க வைக்கும் பிரண்டையை எப்படி சாப்பிடலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
பிரண்டை ஜீரண சக்தியை அதிகப்படுத்தி பசியைத்தூண்டக்கூடிய தன்மைகொண்டது. மேலும் தொடர்ந்து சாப்பிட்டு வர எலும்புகள் வலுவாகும். இந்த பிரண்டையை சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். பொதுவாக எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு கட்டாயம் கொடுக்கச் சொல்வார்கள்.
இந்த பிரண்டையை எப்படி சமைத்து உணவோடு எடுத்துக்கொள்ளலாம் எனப் பார்க்கலாம். பிரண்டையை குழம்பாக, வற்றலாக, பிரண்டை உப்பு என்று பலவைகள் செய்யலாம். பிரண்டை துவையல் செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்:
பிரண்டை – 1 கட்டு
உளுத்தம்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 10 பல்
இஞ்சி – 1 துண்டு
காய்ந்த மிளகாய் – 5 முதல் 6
தேங்காய் – 1 துண்டு
புளி – சிறிதளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – 1/4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
பிரண்டையை தோல் சீவி நன்கு சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். பின்னர் அடுப்பில் ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் 2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பினை சேர்க்கவும். தொடர்ந்து மற்ற பொருகளையும் ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக வருத்துக்கொள்ளவும்.
அதன் பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள பிரண்டையை சேர்த்து நன்கு வதக்கவும். நன்று வதங்கியதும், மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். இதனை 2 – 3 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.