தமிழகம் முழுவதும் உள்ள காடு மற்றும் மரங்களின் அடர்த்தியை 33 சதவீதமாக உயர்த்த பசுமை தமிழ்நாடு இயக்கத்தை ஏற்படுத்துவதற்கான அறிவிப்பு சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது. அதன்படி உருவாக்கப்பட்ட பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் நோக்கம் என்னவென்றால், பசுமை இயக்கத்தின் கீழ் அடுத்த 10 வருட காலத்தில் நகரப்புற பகுதியில் விவசாய பண்ணைகள், கல்வி நிறுவனங்கள், கோயில் நிலங்கள், தொழிற்சாலைகள் தொழிற்சாலைக்கு சொந்தமான நிலங்கள், ஏரிக்கரைகள் ஆகியவற்றில் உள்ளூர் மர வகைகள் நடப்படும். இந்த திட்டத்திற்காக பல்வேறு மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்போடு நாற்றாங்கால்கள் மூலமாக 2.80 கோடி மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தமிழகத்தில் “பசுமைத் தமிழ்நாடு” இயக்கத்துக்கு தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அதாவது, நாற்றுகளின் தேவை மற்றும் நாற்றங்கால்களை கண்காணிக்க பசுமைத் தமிழ்நாடு இயக்கத்துக்காக www.greentnmission.com என்ற தளி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், மரக்கன்றுகளின் நடவு, பிழைப்புத்திறன் போன்றவற்றை கண்காணிக்க அனைத்து நடவு இடங்களின் விவரங்கள் புவிக்குறியீடு தரவுகளுடன் சேகரிக்கப்படுகின்றன.