பச்சிளம் குழந்தையை பெற்ற தாயே காட்டில் வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா அருகே கடந்த வெள்ளிக்கிழமை தும்பொலி காட்டுப்பகுதியில் பிறந்த குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அங்கு பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வந்த வெளி மாநில தொழிலாளர்கள் குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு வீசப்பட்டு சென்ற பச்சிளம் பெண் குழந்தையை மீட்டனர். அப்போது குழந்தை பிறந்து நீண்ட நாட்கள் ஆகவில்லை என்பது தெரியவந்தது.
உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையை பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து தாயை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்த நிலையில் அனைத்து மருத்துவமனைகளிலும் விசாரணை நடத்தினர்.அப்போது அதிக ரத்தப்போக்கு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அந்தப் பெண்ணுடன் மருத்துவமனைக்குச் சென்ற கணவர் மற்றும் தாயும் விசாரணையின் போது தனது மனைவி கர்ப்பமாக இருப்பது எங்களுக்கு தெரியாது எனக் கூறியுள்ளனர்.மருத்துவர்கள் சொன்ன போது தான் அந்த பெண்ணுக்கு பிரசவத்திற்கு பிறகு ரத்தம் கசிந்தது தெரிந்தது என போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அந்தப் பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட பிறகு அவர்களிடம் இருந்து போலீசார் விரிவான வாக்குமூலம் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.