சாயப்பட்டறை கழிவுகள் நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதால் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் பச்சை நிறத்தில் இருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதாக புகார்கள் உள்ளன. இதனையடுத்து பள்ளிபாளையம், பழனியப்பா நகர், முஸ்லிம் தெரு, சின்ன வீடு, முருகன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சாயப்பட்டறை கழிவுகள் காவிரி ஆற்றில் கலப்பதால் குடிநீர் பச்சை நிறமாக காணப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நீரை குடிப்பதால் குழந்தைகளுக்கு காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து சுத்தமாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.