பஞ்சாபில் முதல் மந்திரி பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கு முன்பு காங்.,கை சேர்ந்த அப்போதைய முதல் மந்திரி சரண்ஜித் சிங்கின் உறவினர் பூபிந்தர் சிங் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரூ.10 கோடி ரொக்கமானது கைப்பற்றப்பட்டது. இதையடுத்து விசாரணையில் சட்டவிரோத மணல்குவாரி நடத்துபவர்கள் லஞ்சமாக கொடுத்த பணம் என்பது தெரியவந்தது.
அதன்பின் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், முன்னாள் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் நேரில் ஆஜராக, அவருக்கு அமலாக்கத்துறை “சம்மன்” அனுப்பியது. அதனை தொடர்ந்து ஜலந்தரிலுள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் சரண்ஜித் சிங் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் 6 மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக சரண்ஜித் சிங் கூறியதாவது, “அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு எனக்கு தெரிந்தவரையிலும் பதில் அளித்தேன்.
மீண்டுமாக ஆஜராவது தொடர்பாக எதுவும் கூறப்படவில்லை” என்று கூறினார். அதன்பின் பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவஜோத் சிங் சித்து கூறியதாவது, எனது போராட்டம் பஞ்சாபிற்காக தானே தவிர மணலுக்காக அல்ல. நிலம், மண், மது மாபியா நடத்தியவர்கள் கஜானாவை காலிசெய்து சுயநலத்திற்காக பஞ்சாபை வீழ்த்தினர். இதனால் அவர்களுடனான சண்டை தொடரும் என்று கூறினார்.