பாகிஸ்தானில் பிரதமராகயிருந்த இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றியடைந்தது. இதையடுத்து இம்ரான்கான் பதவிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் பஞ்சாப்மாகாண முதல் மந்திரி உஸ்மான் புஸ்தார் தன் ராஜினாமாவை மாகாண கவர்னர் சவுத்ரி முகமது சர்வாரிடம் வழங்கிய நிலையில் அவரும் அதை ஏற்று கொண்டார். அதன்பின் பஞ்சாப் அமைச்சரவை கலைக்கப்பட்டது. அடுத்ததாக பஞ்சாப் மாகாணத்தின் புது முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு சென்ற 2ஆம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கப்பட இருந்தது. அதனை தொடர்ந்து வாக்குப்பதிவு காரணமின்றி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் பாகிஸ்தானின் புது பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரிப் போட்டி இன்றி தேர்வானார்.
அவர் புது அமைச்சரவையை அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதனிடையே பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாப்மாகாணம் முதல் மந்திரியை தேர்ந்தெடுப்பதற்கான சட்டசபை நேற்று கூட்டப்பட்டது. இதற்காக அவைக்கு வருகைதந்த துணை சபாநாயகர் தோஸ்த் முகமது மஜாரி மீது, பி.டி.ஐ. கட்சி உறுப்பினர்கள் லோட்டாக்களை (பாத்திரம்) வீசி எறிந்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது பிடிஐ கட்சியிலுள்ள சில உறுப்பினர்கள் பிரிந்து சென்று எதிர்க் கட்சிகளுக்கு ஆதரவு தந்துள்ளனர். இவற்றிற்கு எதிராகவும் பி.டி.ஐ. உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். துணை சபாநாயகர் மஜாரி மீதும் லோட்டாக்கள் வீசப்பட்டது. அவர் மீது பிடிஐ கட்சி உறுப்பினர்கள் ஒரு கட்டத்தில் தாக்குதல் நடத்தி உள்ளனர். அதன்பின் அவை பாதுகாவலர்கள் மஜாரியை சூழ்ந்து கொண்டு அவருக்கு பாதுகாப்பு வழங்கினர்.
இதன் காரணமாக அவையில் அமளி ஏற்பட்டு பின், பஞ்சாப் முதல் மந்திரியாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியை சேர்ந்த ஹம்சா ஷபாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கிடையே வாக்கெடுப்பு ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, துணைசபாநாயகர் மஜாரி மீது தாக்குதல் நடத்தியதற்காக பி.டி.ஐ. கட்சி உறுப்பினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த கட்சியினர் அவையிலிருந்து வெளிநடப்பும் செய்திருந்தனர். இவ்வாறு பஞ்சாப்பின்முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட ஹம்சாஷபாஸ், பாகிஸ்தான் நாட்டின் புது பிரதமரான ஷபாஸ் ஷெரிப்பின் மகன்ஆவார். இதில் 197 வாக்குகளை பெற்று ஹம்சா வெற்றியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பர்வேஷ் இலாஹி ஒரு வாக்குகூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரது கட்சி மற்றும் பிடிஐ கட்சி தேர்தலை புறக்கணித்து இருந்தது. ஹம்சாவின் குடும்பத்திலிருந்து பஞ்சாப் முதல் மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஹம்சா ஷபாஸ் 3-வது நபர் ஆவார். இதற்கு முன் தற்போது பிரதமராகவுள்ள ஷபாஸ் ஷெரிப், முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரிப் போன்றோர் இப்பதவியை வகித்துள்ளனர்.