கோட்டைப்பட்டினம் மீனவர் விசைப்படகின் என்ஜினில் ஏற்பட்ட கோளாரை சரிசெய்ய கடலுக்குள் குதித்த போது மாயமான நிலையில், அவரை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருத்து நேற்று (23 ஆம் தேதி ) 200-க்கும் அதிகமான விசைப்படகுகளில் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். இதில் கோட்டைப்பட்டினம் பகுதியில் வசித்து வந்த ஷாலினி என்பவருக்கு சொந்தமான படகில் அவர் இருக்கும் பகுதியில் வசித்து வரும் கந்தசாமி என்பவரின் மகன் ராஜா (வயது 42), அம்பலவாணன் என்பவரின் மகன் சுந்தரபாலு (50) மற்றும் தர்மன் என்பவரின் மகன் சந்தனகுமார் (43) ஆகிய 3 பேரும் செல்வதற்கு டோக்கன் வாங்கிக்கொண்டு கடலில் மீன்பிடிக்க நேற்று மாலை கோட்டைப்பட்டினம் மீன் பிடி துறைமுகத்திலிருத்து புறப்பட்டனர்.
அவ்வாறு அவர்கள் செல்லும் போது விசைப்படகின் என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் படகில் இருந்த சுந்தரபாலு என்பவர் சரிசெய்ய கடலில் குதித்துள்ளார். படகில் இருந்து குதித்த சுந்தரபாலு வெகு நேரமாகியும் வெளியே வராததால் அவருடன் இருந்த மற்ற 2 பேரும் கடலில் குதித்து அவரை தேடிய போது கிடைக்காததால் அதிர்ச்சியடைந்து உடனே மீனவர் சங்க நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் மீனவர் சங்க நிர்வாகிகள், மீன் வளத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து அறிந்த மீன்வளத்துறை அதிகாரிகள்,கடலோர காவல் குழுமத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனை தொடர்ந்து கடலில் குதித்த மீனவரை தேடும் பணியில் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் தீவிரமாக செயல்பட்டு தேடி வருகிறார்கள்.