மங்களூர் அருகே மீன் பிடிக்கும் படகு கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கூடு அருகே பேய்ப்பூரிலிருந்து கடந்த ஞாயிறு அன்று ஜாபர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், 14 பேர் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதே படகில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த ஏழு மீனவர்களும் சென்றிருந்தனர். மங்களூர் கடற்கரையிலிருந்து 43 கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, சிங்கப்பூரைச் சேர்ந்த ஹாவ்ரே என்ற சரக்கு கப்பல் மோதியதில் மீன்பிடி விசை படகு கடலில் மூழ்கியது. இதில் படகில் சென்ற 3 பேர் உயிரிழந்த நிலையில், கடலில் தத்தளித்த 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
எஞ்சிய 5 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மாயமான மீனவர்களின் விபரம் குறித்து முழுமையாக தெரியாததால் குளச்சல் பகுதி மீனவர்கள் பரிதவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். விபத்துக்குள்ளான விசைப்படகை குளச்சல் பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. கடலில் மூழ்கியவர்களின் நிலை குறித்து சரிவர தெரியாததால் தவிப்பில் உள்ள குளச்சல் பகுதி மீனவர்கள், அரசு உடனடியாக தேடும் பணியில் ஈடுபட்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.