நடிகர் ரன்பீர்கபூர் மற்றும் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிப்பில் பெயரிடப்படாத இந்தி படம் ஒன்றின் படப்பிடிப்பு மராட்டியத்தின் மும்பை நகரில் மேற்கு அந்தேரி பகுதியில் சித்ரகூட் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் நேற்று திடீரென்று இத்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கரும்புகை வான் வரை பரவியது. அவ்வாறு காற்றில் பரவிய புகையால் அப்பகுதியே புகைமண்டலம் போன்று காட்சியளித்தது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்தது.
இதனிடையில் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக கூப்பர் மருத்துவமனையின் மருத்துவர் சதாபுலே கூறியதாவது, மும்பை அந்தேரியின் மேற்கு பகுதியில் நேற்றுமாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரும் வழியிலேயே 32 வயது ஆண் ஒருவர் உயிரிழந்துவிட்டார் என தெரிவித்துள்ளார். இதற்கிடையில் நடிகர் ரன்பீர்கபூர் மற்றும் நடிகை ஷ்ரத்தா கபூர் அண்மையில் ஸ்பெயினில் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு மும்பை திரும்பினர்.
அவர்கள் படப்பிடிப்பில் பங்கேற்க இருந்த சூழ்நிலையில் இந்த தீ விபத்து சம்பவமானது ஏற்பட்டுள்ளது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு நேற்றிரவு 10:35 மணியளவில் மும்பை தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இத்திரைப்படம் வரும் 2023 ஆம் வருடம் மார்ச் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. காமெடி மற்றும் காதல் நிறைந்த இப்படத்தில் போனிகபூர், டிம்பிள் கபாடியா ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர்.