படப்பிடிப்பு முடிந்ததும் வீட்டிற்கு செல்லுங்கள், உங்கள் மனைவி காத்திருப்பார் என அருண் விஜய்க்கு நடிகை பிரியா பவானி சங்கர் அட்வைஸ் செய்துள்ளார்.
நடிகர் அருண் விஜய் திரையுலகில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆனதை கேக் வெட்டி கொண்டாடினர். அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள மாபியா படத்தை கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படம் பிப்., 21ல் திரைக்கு வருகிறது. இந்நிலையில் அருண் விஜய் திரையுலகில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆனதை கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. 1995ல் சுந்தர்.சி இயக்கிய முறை மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானவர் அருண் விஜய்க்கு 27வது படமாக மாபியா அமைந்துள்ளது.
இந்த படத்தில் நடித்தது பற்றி அருண் விஜய் கூறுகையில், துருவங்கள் 16 படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இந்த படத்தின் கதையை சொல்ல வேண்டும் என்று என்னை அணுகியபோது, அவர் கண்டிப்பாக வித்தியாசமான கதையாக சொல்வார் என்று எதிர்பார்த்தேன். அதேப்போல் ஒரு அருமையான கதையை சொன்னார். காட்சியமைப்புகள் துருவங்கள் பதினாறு படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது என கூறினார்.
இந்த நிகழ்ச்சில் உடன் இருந்த பிரியா பவானி சங்கர், படத்தில் அருண் விஜய் – பிரசன்னாவை ஹீரோ, வில்லன் என பிரித்துப் பார்க்கவில்லை என கூறியுள்ளார். மேலும் இரண்டு பேருமே சிறந்த நடிகர்கள். இந்தபடத்தில் அருண் விஜய்யுடன் தான் எனக்கு காட்சிகள். அருண் விஜய்யிடம் என் அன்பை பல தடவை சொல்லியிருக்கிறேன். பாசிட்டீவான நடிகர். வெற்றிக்காக காத்திருந்த நாட்களில் அவரது கண்ணியமும், விடாமுயற்சியும் அவரது வெற்றியை அழகாக மாற்றியிருக்கிறது.
சினிமா மீது கொண்ட ஆர்வம் காரணமாக இரவு படப்பிடிப்பு முடிந்ததும் வீட்டிற்கு செல்லாமல் அதிகாலை 3 மணிக்கே ஜிம்மிற்கு செல்கிறீர்கள். ஆனால் ஜிம்மிற்கு அடுத்த நாள் காலை கூட செல்லலாம். படப்பிடிப்பு முடிந்ததும் நேராக வீட்டிற்கு செல்லுங்கள். உங்கள் மனைவி ஆர்த்தி காத்துக் கொண்டிருப்பார் என்று அருண் விஜய்க்கு அன்பான அட்வைஸ் செய்துள்ளார்.