நடிகை ஸ்ருதிஹாசன் தனது தங்கை அக்ஷரா படம் இயக்குவதில் ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகை ஸ்ருதிஹாசன் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் அஜித், விஜய் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். இந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான கிராக், வக்கீல் சாப் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகை ஸ்ருதிஹாசன் தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் படத்தில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து இவர் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த ஸ்ருதிஹாசன் ‘லாபம் படத்தில் நடித்த போது மறைந்த இயக்குநர் ஜனநாதனிடம் கம்யூனிசத்தை பற்றி நிறைய கற்றுக் கொண்டேன். இந்த படத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. என் தங்கை அக்ஷரா ஹாசன் படங்களை இயக்குவதில் ஆர்வமாக இருக்கிறார். எதிர்காலத்தில் அவர் படம் இயக்கினால் எனக்கு ஏற்ற கதை அமைந்தால் நிச்சயம் நடிப்பேன்’ என கூறியுள்ளார். மேலும் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் விக்ரம் படத்தில் நடிக்க தனக்கு அழைப்பு வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.