பேருந்தின் படிக்கட்டில் நின்று லாரியை பிடித்தவாறு மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரிலிருந்து ஓமந்தூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தின் பின்பக்க படிக்கட்டுகளில் 5 மாணவர்கள் நின்று கொண்டு பயணம் செய்தனர். இந்நிலையில் துறையூர்- பெரம்பலூர் சாலையில் பேருந்தை ஒட்டி லாரி ஒன்று சென்றது. அப்போது மாணவர்கள் லாரியில் கொக்கி, கம்பி போன்றவற்றை பிடித்ததை பார்த்த லாரி ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தை குறைத்தார். அப்போது அரசு பேருந்தும், லாரியும் மிக அருகே சென்றது.
இதனால் படிக்கட்டுகளில் நின்று ஆபத்தான முறையில் பயணம் செய்த 5 மாணவர்களும் தவறி விழுந்து லாரி சக்கரத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் லாரி ஓட்டுநர் வாகனத்தை மெதுவாக இயக்கியதால் மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டுகளில் நின்று கொண்டு தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.