Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் நின்ற போது…. “பஸ் கிளம்பிய சிறிது நேரத்தில்”…. கீழே விழுந்த மூதாட்டி… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்..!!

ஈரோடு அருகே பேருந்திலிருந்து தவறி விழுந்த பெண் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ஈரோடு மாவட்டம், ரங்கம்பாளையம் கல்யாணசுந்தரம் வீதியில் வசித்து வருபவர் காளியண்ணன். இவருடைய மனைவி 69 வயதுடைய வள்ளியம்மாள். இவர் ஈரோடு பேருந்து நிலையம் செல்வதற்காக நேற்று காலை சென்னிமலை சாலை கே.கே நகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அறச்சலூரில் இருந்து வெள்ளோடு வழியாக ஈரோடு பேருந்து நிலையத்துக்கு வரும் அரசு டவுன் பேருந்து வந்துள்ளது. அந்த அரசு பேருந்தில் வள்ளியம்மாள் ஏறினார்.

அந்தப் பேருந்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட நிறைய பேர் பயணம் செய்தனர். இதனால் பேருந்தில் கூட்டமாக இருந்ததால் வள்ளியம்மாள் அந்த பஸ்ஸில் உள்ளே செல்ல முடியாமல் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தார். பேருந்து கிளம்பி சிறிது தூரம் சென்ற பின்னும் வள்ளியம்மாள் படிக்கட்டில் சரியாக பிடிக்க முடியாமல் நின்றதால் நிலைதடுமாறி எதிர்பாராதவிதமாக பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

அப்போது பஸ் மெதுவாகச் சென்றதாலும், வேறு வண்டி வரவில்லை என்பதாலும் கீழே விழுந்த வள்ளியம்மாள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இதையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தாலுக்கா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, அரசு டவுன் பேருந்தில் மகளிருக்கு இலவசம் என்பதால் அதிகமாக பெண்கள் பயணம் செய்கின்றார்கள். கூட்டம் அதிகமாக இருப்பதால் சில நேரங்களில் பஸ் நிற்காமல் சென்று விடுகிறது என்று புகார் வருகிறது. எனவே பொதுமக்கள் கூட்டமாக இருக்கின்ற பஸ்களில் ஏற வேண்டாம் என்றும், டவுன் பேருந்துகள் நிறைய இருப்பதால் கூட்டம்  இல்லாத பஸ்ஸில் பயணம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர்.

Categories

Tech |