சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பெயரில் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதை தடுக்க வேண்டும் என்பதற்காக தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்து வழித்தடங்களில் சோதனை நடத்தி படியில் பயணம் செய்யும் மாணவர்களை பிடித்து போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் மாணவர்கள் தொடர்ந்து பேருந்துகளில் பயணம் செய்துவருகின்றன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி சென்னை முழுவதும் நேற்று போக்குவரத்து காவல்துறையினரால் மாநகர பேருந்துகளில் படிக்கட்டுகளில் பயணம் செய்த 111 பள்ளி மாணவர்களும், 43 கல்லூரி மாணவர்களையும் பேருந்துகளில் இருந்து கீழே இறக்கி விட்டு அந்த மாணவர்களின் பெயர் மற்றும் முகவரி, பள்ளி மற்றும் கல்லூரியில் அடையாள அட்டை மூலம் சரிபார்த்து அந்த மாணவர்களின் பெற்றோருக்கும், சம்பந்தப்பட்ட பள்ளி கல்லூரி முதல்வரும் தெரிவிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போக்குவரத்து காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.