தமிழகத்தில் இன்று முதல் மழை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன்பிறகே தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் திடீரென பின்வாங்கி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. வங்கக் கடலில் ராமேஸ்வரம் அருகே நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி உள்ளதால் மழை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழையும் மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும். சென்னையை பொருத்தவரையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.