வேலை கிடைக்காத வேதனையில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் உள்ள செல்லையாபில்லை தெருவில் ரஞ்சித்குமார் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். பி.ஏ. ஆங்கிலம் படித்த இவர் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இதனால் ரஞ்சித்குமார் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த 11ஆம் தேதி ரஞ்சித்குமார் தனது சகோதரி ராதா வீட்டிற்கு சென்றார். அப்போது ரஞ்சித்குமார் தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார்.
இதுகுறித்து ரஞ்சித்குமாரிடம் கேட்டபோது வேலை கிடைக்காத வேதனையில் விஷம் குடித்தது தெரியவந்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக ரஞ்சித்குமாரை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ரஞ்சித்குமார் பரிதாபாக உயிரிழந்துள்ளார். இதனையறிந்த தேனி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.