மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த கொரோனா நோயாளி படுக்கையிலிருந்து கீழே விழுந்து துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் காணொளியாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தெலங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டம், கங்காதர் மண்டலம் வெங்கடய்யப்பள்ளியை சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவர் சிகிச்சைக்காக கரீம்நகர் அரசு மருத்துவமனையில் கடந்த 5 நாட்களுக்கு முன் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், நேற்று முன்தினம் அவர் படுக்கையில் இருந்து கீழே விழுந்தார். அதன்பின் திடீரென கை, கால்களை 40 நிமிடங்களாக உதைத்து துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது, மருத்துவமனை ஊழியர்கள் யாரும் முதியவருக்கு உதவ முன்வரவில்லை. மேலும், அங்கிருந்த சக நோயாளிகளும் அவருக்கு உதவி செய்யவில்லை.
இதனை வீடியோ எடுத்து சக நோயாளிகள் சமூக வலைத்தளங்களில் பரவ விட்டு வேடிக்கை பார்த்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. நீண்ட நேரமாகியும் சடலத்தை கொண்டு செல்ல ஊழியர்கள் யாரும் வரவில்லை. மறுபுறம் சடலத்தை வாங்க அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் முன்வரவில்லை. இதனால், சடலம் சவக்கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மருத்துவமனை கண்காணிப்பாளர் ரத்னமாலா இச்சம்பவம் பற்றி கூறுகையில், ‘‘நோயாளி கட்டிலில் இருந்து விழுந்தவுடன் செவிலியர்கள் உடனே ஆக்ஸிஜனை கொடுத்தனர். இருந்தும் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை’’ என கூறினார்.