முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம் எஸ் தோனியை மீண்டும் இந்திய அணியில் சேர்க்க பிசிசிஐ ஆலோசனை நடத்திய வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி 2ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து வெளியேறியது. முதலில் ஆடிய இந்திய அணி 168 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் விக்கெட் இழக்காமல் 170 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.
உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எந்தவித நெருக்கடியும் கொடுக்க முடியாமல் மிகவும் மட்டமாக படு தோல்வி அடைந்தது ரசிகர்கள் மனதில் சோகத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்த டி20 தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதே சமயம் நெருக்கடியான நேரங்களில் வீரர்கள் சிலர் சரியாக ஆடாததும் தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது.
எனவே இந்திய அணியின் இந்த மோசமான செயல்பாடு குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடும் விமர்சனத்தை பதிவு செய்து வருகின்றனர். மேலும் இந்திய அணி வீரர்கள் தைரியம் இல்லாமல் பயந்து தயங்கி ஆடுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்தனர். அதில் குறிப்பாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், இனி எந்த ஒரு கேப்டனாலும் 3 கோப்பையை வெல்ல முடியும் என்று நான் நினைக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அவர் 3 ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த தோனியின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக புகழ்ந்து இருந்தார். அதேபோலத்தான் ரசிகர்களும் இந்தியா தோல்வியடைந்த சமயத்தில் தோனியை போல யாரும் கேப்டனாக வர முடியாது என அவரை சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்தனர்.
இந்நிலையில் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம் எஸ் தோனியை மீண்டும் இந்திய அணியில் சேர்க்க பிசிசிஐ ஆலோசனை நடத்திய வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பிசிசிஐ நடத்திய ஆலோசனையில் தோனிக்கு இந்திய அணியின் மிகப் பெரிய பொறுப்பை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் பயிற்சியாளராக இருந்து வருவதால் அவரது பணிச்சுமை அதிகமாக உள்ளதால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே சர்வதேச ஐசிசி போட்டிகளில் அச்சமில்லாத பிராண்ட் கிரிக்கெட் திறனை கொண்டு வருவதற்கு டி20 அணியில் தோனியை இயக்குனராக சேர்க்க வேண்டும் என பிசிசிஐ வட்டாரத்தில் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே தோனி விரைவில் டி20 வடிவத்தில் மட்டும் இயக்குனராக வருவார் என்று தெரிகிறது. கடந்தாண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி செயல்பட்டு வந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. இந்த செய்தி தோனியின் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.