நாடு முழுவதும் படித்த இளைஞர்கள் அதிகமானோர் வேலை இல்லாமல் வேலை தேடி வருகிறார்கள். இதனால் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்யும் நபர்களிடம் ஏமாறுவது தொடர்கதையாகி வருகிறது. அதாவது உங்களுக்கு அரசு வேலை அல்லது தனியார் வேலை நிறுவங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி படித்த இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி நடைபெற்று வருகிறது. நாகர்கோவில் சுசீந்திரம் ஆண்டார்குளம் பகுதியில் 32 வயதுடைய பட்டதாரி வாலிபர் ஒருவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில்,நான் கடந்த 2016 ஆம் ஆண்டு பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலைக்காக சில இணையதளத்தில் பதிவு செய்திருந்தேன். இந்நிலையில் டெல்லியில் செயல்படும் ஒரு தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தில் இருந்து எனது செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் எதிர்முனையில் பேசிய நபர், டெல்லியில் உள்ள விமான நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள சில காலியிடங்கள் இருப்பதாகவும், இந்த வேலைக்கு உங்களை தேர்வு செய்துள்ளதாகவும் கூறினார். மேலும் ரூ.25,27, 700 கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதனையடுத்து நானும் அவரது பேச்சை நம்பி பல தவணைகளாக எனது செல்போனுக்கு அந்த நபர் அனுப்பிய வங்கி கணக்கில் ரூ.25,27,700 அனுப்பி வைத்தேன். அதன் பிறகு நிறுவனத்தை தொடர்பு கொண்டேன். அப்போது அது போலியானது என்பதும் என்னிடம் பணம் மோசடி செய்ததும் தெரிய வந்தது. எனவே என்னிடம் பணம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்று அதில் கூறப்பட்டது. இந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வசந்தி சப் இன்ஸ்பெக்டர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஏமாற்றப்பட்ட வாலிபரின் மோசடி செய்த ஆசாமிகள் டெல்லியில் இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் டெல்லிக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து டெல்லி ராம் விகார் பகுதி சேர்ந்த ராம்விகார் மகன் ஆகாஷ்(21) என்பவரை கைது செய்து கன்னியாகுமரிக்கு அழைத்து வந்தனர். அதன் பிறகு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனியார் நிறுவனத்தின் பணியாற்றி வந்த அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அதனைப் போல பலரிடம் ஆன்லைன் மூலம் மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த மோசடியில் தொடர்பில் உள்ள ஆகாசின் கூட்டாளிகள் 5 பேரும் டெல்லியில் வசித்து வருவதும் அவர்களில் 2 பேர் தமிழகத்தை பூர்விமாகக் கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது. அவர்களையும் கைது செய்ய சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.