பெரம்பலூர் மாவட்டத்தில் பட்டப்பகலில் ஆசிரியரிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரூர் கிராமத்தில் சிங்கமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார். இவர் ஆசிரியராக அயனாபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 8-ஆம் தேதி அன்று மதியம் சொந்த வேலை காரணமாக பெரம்பலூர் செல்வதற்கு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். அதன் பின் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்த 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அதில் மோட்டார் சைக்கிளில் பின் அமர்ந்திருந்த நபர் நடந்து சென்று கொண்டிருந்த தமிழ்ச்செல்வியின் கழுத்தில் இருந்த 7 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ்ச்செல்வி சத்தம் போட்டார். அதை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். அதில் தமிழ்ச்செல்வியின் கழுத்தில் சங்கிலியை பறித்த போது காயம் ஏற்பட்டிருந்தது. அவர் இதற்காக சிகிச்சை பெற்றார். மேலும் இதுகுறித்து பாடாலூர் காவல் நிலையத்தில் தமிழ்செல்வி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் ஆசிரியரின் கழுத்தில் இருந்து தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.