பட்டப்பகலில் தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை 4 நாய்களை கடித்து கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள நம்பியூர் காந்திபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று சுற்றி திரிகிறது. நள்ளிரவு நேரத்தில் ஊருக்குள் நுழையும் சிறுத்தை இதுவரை சுமார் 5 ஆடுகளை கடித்துக் கொன்றது. இதனால் 26-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மதியம் 12 மணி அளவில் வேலுச்சாமி என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை 4 நாய்களை கடித்து கொன்று விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வேலுசாமி உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வனத்துறையினர் ஆய்வு செய்த போது அங்கு பதிவானது சிறுத்தையின் கால்தடம் தான் என்பது உறுதியானது. எனவே தொடர்ந்து அட்டகாசம் செய்யும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.