பட்ட பகலில் இளைஞர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள புளியம்பேடு பகுதியில் 2 பேர் இருசக்கர வாகனத்தில் இன்டர்நெட் வயருடன் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் இளைஞர்கள் சென்ற இரு சக்கர வாகனத்தை வழிமறித்தனர். அதன் பிறகு திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இளைஞரை சரமாரியாக வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். ஆனால் உடன் வந்த மற்றொரு இளைஞரான ஸ்ரீதர் அதிர்ஷ்டவசமாக தப்பி உயிர் தப்பினார். இது தொடர்பாக பூந்தமல்லி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி மற்றும் காவலர்கள் கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து மேற்கொண்ட விசாரணையில் பூந்தமல்லி அருகே வெள்ளவேடு பகுதியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பது தெரிய வந்தது. இவர் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது வெள்ளவேடு காவல்நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் ஸ்டீபன் ராஜ் செய்த கொலைக்கு பழி வாங்குவதற்காக அவர் கொலை செய்யப்பட்டாரா? இல்லையெனில் வேறு ஏதும் முன் விரோதமா? போன்ற பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதோடு, குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.