ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று அரசு விதித்துள்ள தடையை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளை விற்பனை செய்யவும் வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை திரும்பப் பெறக்கோரி அம்மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் திமுக தலைவர் கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில், “கொரோனா பரவலை காரணம் கூறி பட்டாசு வெடிப்பதற்கு ராஜஸ்தான் அரசு தடை விதித்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. கொரோனா பேரிடரால் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பொருளாதார ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான சூழலில் தீபாவளி பண்டிகை மட்டுமே அவர்களுக்கு ஒரு ஆறுதலாக இருக்கும். இந்நிலையில் பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று அரசு விதித்துள்ள தடை பட்டாசு தொழிலாளிகளை மிகக் கடுமையாக பாதித்துள்ளது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ராஜஸ்தான் அரசு விதித்துள்ள தடையை முதல்-மந்திரி திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.