ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு விதித்துள்ள தடையை மீறி பட்டாசுகளை விற்பனை செய்தால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசு வெடிப்பதற்கு அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த முடிவுக்கு பல்வேறு ஆதரவுகள் இருந்தாலும், பட்டாசு தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்கள் இந்த முடிவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின், ராஜஸ்தான் முதல்வருக்கு கடிதம் ஒன்றை நேற்று எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்தில் பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ராஜஸ்தான் அரசு திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் ராஜஸ்தான் அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “அரசு விதித்துள்ள தடையை மீறி ராஜஸ்தானில் பட்டாசு விற்பனை செய்பவர்கள் அனைவருக்கும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதுமட்டுமன்றி பட்டாசு வெடிப்பவர்கள் அல்லது அதற்கு அனுமதி அளிப்பவர்கள் அனைவருக்கும் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்” என்ற ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.